ஆணவக்கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஆணவக்கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.
நெல்லை,
தமிழ்நாட்டில் ஆணவக்கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.
தனிச்சட்டம்
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 157 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெட்ரோல்-டீசல் விலை
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்-டீசலுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய பட்ஜெட் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் தராது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. அவசர சட்டம் மூலம் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால், நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிலுவையில் இருக்கிறது. அதை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்யவில்லை.
நெல்லையில் மாநில மாநாடு
பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2, 3, 4 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரு தேர்தல், ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஓட்டு சதவீதத்தில் பார்த்தால் 33 சதவீதம் உள்ளது. அந்த கட்சிக்கு எதிராக 67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பதை நரேந்திர மோடி மறந்து விடக்கூடாது.
நியூட்ரான் திட்டம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை, ராஜபாளையம்- தென்காசி 4 வழிச்சாலை திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன. விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகுதான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்குகளை மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மாதர் சங்க மாநில செயலாளர் பத்மாவதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story