மாவட்ட செய்திகள்

மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி + "||" + At the Municipal Office Buying the job fraud

மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி

மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்தவர் பிரதாப். பட்டதாரி வாலிபரான இவர், அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அரசாங்க வேலையும் தேடி வந்தார்.

இந்தநிலையில் இவரது மாமனார் மூலமாக நபர் ஒருவர் இவருக்கு அறிமுகமானார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்றும், மாத சம்பளம் ரூ.28 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தால் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் அந்த நபர் கூறினார்.


இதை உண்மை என்று நம்பிய பிரதாப், ரூ.50 ஆயிரம் கொடுப்பதற்கும் சம்மதித்தார். நேற்று முன்தினம் பிரதாப்பை அந்த நபர் ரிப்பன் மாளிகைக்கு அழைத்து வந்தார். அங்குள்ள இ-சேவை மையத்தில் உட்கார வைத்தார். பிரதாப்பிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு உடனடியாக வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு அந்த நபர் ரிப்பன் மாளிகைக்குள் சென்றார்.

போனவர் போனவர்தான், திரும்பி வரவில்லை. ரூ.50 ஆயிரம் பணத்தோடு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். நேற்று முன்தினம் காலையில் இருந்து பகல் முழுக்க ரிப்பன் மாளிகையிலேயே காத்து கிடந்த பிரதாப், ரூ.50 ஆயிரத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.

அதன்பிறகு அவர் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.50 ஆயிரத்தை மோசடி செய்து அபகரித்த நபரை தேடி வருகிறார்கள்.