ஈரோட்டில் பணத்துக்காக பாட்டியை எரித்து கொலை செய்ய முயன்ற பேத்தி கைது


ஈரோட்டில் பணத்துக்காக பாட்டியை எரித்து கொலை செய்ய முயன்ற பேத்தி கைது
x
தினத்தந்தி 13 July 2019 4:30 AM IST (Updated: 13 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், பணத்துக்காக பாட்டியை எரித்து கொலை செய்ய முயன்ற பேத்தியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

கரூர் மாவட்டம் உப்புபாளையம் அருகே உள்ள குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமாயம்மாள் (வயது 92). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள். அனைவரும் இறந்துவிட்டனர். பேரன், பேத்திகள் உள்ளனர். கடைசி மகன் கணேசனுக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்து ராமாயம்மாள் பெயரில் இருந்தது. ராமாயம்மாளின் பேரன் ஸ்டாலினுக்கு, தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

கருத்துவேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது கணவரை பிரிந்து ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியில் ராமாயம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி தனது பாட்டியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்று அவரது சொத்தை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.

மேலும் தமிழ்ச்செல்வி கடந்த 7–ந் தேதி ராமாயம்மாளிடம், வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனக்கு எடுத்து கொடுக்கும்படி கூறி உள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்ச்செல்வி, ராமாயம்மாளை கொலை செய்வதற்காக அவரது தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

இதனால் வலி தாங்க முடியாமல் ராமாயம்மாள் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வியை கைது செய்தனர்.


Next Story