திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வங்கியில் அபாய மணி இரவில் ஒலித்ததால் பரபரப்பு; ஒரே வாரத்தில் 2 முறை நடந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி


திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வங்கியில் அபாய மணி இரவில் ஒலித்ததால் பரபரப்பு; ஒரே வாரத்தில் 2 முறை நடந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 July 2019 4:00 AM IST (Updated: 13 July 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வங்கியில் அபாய மணி இரவில் ஒலித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே வாரத்தில் 2 நாட்கள் நடந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோட்டில் புதிய பஸ் நிலையத்திற்கும் நெசவாளர் காலனிக்கும் இடையே கர்நாடக வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 9-ந்தேதி இரவு திடீரென அந்த வங்கியில் அபாய மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வங்கி மேலாளர் வங்கியை திறந்து பார்த்தனர். அப்போது அங்குள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து அபாய மணி ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வங்கியில் சோதனை நடத்தியதில் வங்கிக்குள் யாரும் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் பாதுகாப்பு பெட்டக அறையில் எலி நடமாட்டம் இருந்ததால் அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய மணி ஒலித்திருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே வங்கியில் மீண்டும் அபாய ஒலி ஒலித்தது. இதன் காரணமாக மீண்டும் போலீசாரும், வங்கி ஊழியர்களும் அலறியடித்தபடி வங்கிக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது வங்கிக்குள் யாரும் நுழையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் 2 நாட்கள் இரவு நேரத்தில் வங்கியில் அபாய மணி ஒலித்ததால் வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வங்கி முன்புஉள்ள ஏ.டி.எம்.-ல் இரவு நேரத்தில் காவலாளி பணியில் இல்லை.

மேலும் வங்கியின் பின்புறம் உள்ள இடம் புதர் மண்டிய நிலையில் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வங்கி மற்றும் ஏ.டி.எம்.-க்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் காவலாளியை நியமிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story