புதுவை பஸ் நிலையத்தில் மடிக்கணினி திருடியவர் கைது; மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


புதுவை பஸ் நிலையத்தில் மடிக்கணினி திருடியவர் கைது; மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 July 2019 3:45 AM IST (Updated: 13 July 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் மடிக்கணினி திருடிய திருச்சியைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 19 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை புதிய பஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக திருட்டுகள் நடந்து வந்தன. இதுதொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்தும் விசாரித்தனர்.

சம்பவத்தன்று சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமாரிடம் 2 மடிக்கணினிகளை திருடிவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார். அவரை பஸ் நிலையத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதில் அவருடைய கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த செந்தில் (வயது 38) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து 3 மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரித்ததில் தப்பிஓடிய கூட்டாளிகளின் பெயர் செல்வகுமார், முத்துக்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து செந்தில் அளித்த தகவலின் பேரில் திருச்சியில் அவருடைய வீட்டில் இருந்து 16 மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள செந்திலின் கூட்டாளிகள் செல்வகுமார், முத்துக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசார் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பாராட்டினார்.

Next Story