16-ந் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில் 16-ந் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில் 16-ந் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. இந்த நிலையில் இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை என்று சபாநாயகர் கூறி, அவற்றை நிராகரித்துவிட்டார்.
இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து, தங்களின் ராஜினாமா கடிதங்களை உடனே அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கோரினர். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும் என்று 10 எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டது. மேலும் சபாநாயகர் உடனே அந்த ராஜினாமா கடிதங்கள் மீது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
ராஜினாமா கடிதம்
இதை எதிர்த்து சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்து, ராஜினாமா கடிதங்கள் மீது உடனே முடிவு எடுக்க இயலாது என்றும், அதன் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் கூறி காலஅவகாசம் கேட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை 12-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதன் மீது சபாநாயகர் உடனே எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகர் தாக்கல் செய்த மனுக்கள், நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையில் நீதிபதிகள் தீபக்குப்தா, அனிருத்தபோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டு அவமதிப்பு
விசாரணை தொடங்கியதும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், ‘சபாநாயகர் இரட்டை குதிரை சவாரி செய்கிறார். ஒருபுறம் கோர்ட்டு தனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறுகிறார். மற்றொரு புறம் இந்த ராஜினாமா கடிதங்கள் பரிசீலிக்க தனக்கு மேலும் நேரம் தேவை என்று கூறுகிறார். சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட ஒரு வரி மட்டுமே அடங்கிய ராஜினாமா கடிதங்களை படித்து முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்படாது.
இதில் விஷயம் என்னவென்றால் இந்த ராஜினாமா கடிதங்களை ஏற்பது என்பது அவையில் சபாநாயகரின் அதிகாரத்துடன் தொடர்பு இல்லாதது. பட்ஜெட் மீது வாக்களிக்க எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கட்சி கொறடா உத்தரவு அவர்களை பதவி நீக்கம் செய்யவும் அவர்களுடைய ராஜினாமா கடிதத்தின் மீதான முடிவை தாமதப்படுத்தவும் வகுத்த திட்டமாகும். சுப்ரீம் கோர்ட்டு விதித்த கால கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காததால் சபாநாயகரின் இந்த நடவடிக்கை கோர்ட்டு அவமதிப்பின் கீழே வருகிறது’ என்றார்.
முகாந்திரம் இல்லையா?
சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் தானாகவே முன்வந்து கொடுக்கப்பட்டவை மற்றும் சரியானவை என்று உறுதி செய்துகொள்ள சபாநாயகருக்கு அரசியல் சட்டப்பிரிவு 190(3)(பி) கீழ் உரிய அதிகாரம் உள்ளது. 1974-ல் மேற்கொண்ட சட்ட திருத்தத்தின் அடிப்படையில் இந்த அதிகாரம் சபாநாயருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்’ என்றார்.
தலைமை நீதிபதி, “சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிடுவதற்கு முகாந்திரம் இல்லை என்று கூற வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, “இல்லை“ என்று பதிலளித்தார்.
“ராஜினாமா செய்வதற்கு முன்பே அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்பது உங்கள் வாதமா?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது
தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமாவை அளித்துள்ளனர். 8 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்தனர். சபாநாயகர் முன்பு இவர்கள் நேராக ஆஜராகவில்லை. நாளை வேறு அரசாங்கம் அமைக்கப்பட்டால் இவர்கள் மந்திரிகளாக பதவி ஏற்க அழைக்கப்படலாம் என்றார். அத்துடன் தகுதி நீக்கம் தொடர்பாகவும் ராஜினாமா குறித்து குறிப்பிட்ட நேரத்தில் முடிவு எடுப்பது குறித்தும் சபாநாயகருக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை வாசித்துக் காட்டினார்.
மேலும் அவர், அரசியல் சட்டத்தின் கீழ் இந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முகாந்திரம் உள்ளதா என்பதை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டி உள்ளது. இந்த கடிதங்கள் மீது அவர் அவசரமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் வாதாடினார்.
கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவன் வாதாடுகையில், ‘இந்த மனு முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் யாருடைய அடிப்படை உரிமையும் பாதிக்கப்படவில்லை. எனவே அரசியல் சட்டப்பிரிவு 32-ன் கீழ் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. இந்த ராஜினாமா கடிதங்களின் தன்மை குறித்து உறுதி செய்துகொள்ள சபாநாயகருக்கு உரிய நேரம் தேவைப் படுகிறது. அவசரமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கூடிய விரைவில் ஒரு முடிவை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்து இருக்கிறார். அரியானாவில் சபாநாயகர் 4 மாதங்களில் முடிவெடுக்கலாம் என்று ஒரு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சபாநாயகர் எடுத்த முடிவில் கோர்ட்டு தலையிட்டு மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் கோர்ட்டு அவருக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ என்று வாதிட்டார்.
16-ந்தேதிக்கு மீண்டும் விசாரணை
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அரசியல் சட்டப்பிரிவுகள் 190 மற்றும் 361 ஆகியவற்றின் அடிப்படையில் சில முக்கியமான அம்சங்களை விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. ராஜினாமா கடிதங்கள் குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு கோர்ட்டு உத்தரவு வழங்க முடியுமா என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இவை குறித்து பரிசீலிக்கும் வகையில் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, இந்த 10 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து தற்போது உள்ள நிலையே தொடரும். இந்த வழக்கு வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை இந்த எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால், கர்நாடக அரசுக்கு தற்போதைக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இன்று (நேற்று) நல்ல தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்த்திருந்த மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story