கர்நாடக சட்டசபையில் சி.எஸ்.சிவள்ளி மறைவுக்கு இரங்கல் ஏழைகளுக்காக பாடுபட்டவர் என புகழாரம்


கர்நாடக சட்டசபையில் சி.எஸ்.சிவள்ளி மறைவுக்கு இரங்கல் ஏழைகளுக்காக பாடுபட்டவர் என புகழாரம்
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 8:54 PM GMT)

சி.எஸ்.சிவள்ளி, கிரீஷ் கர்னாட் ஆகியோரின் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏழைகளுக்காக பாடுபட்டவர் சி.எஸ்.சிவள்ளி என்று புகழாரம் சூட்டி உறுப்பினர்கள் பேசினர்.

பெங்களூரு, 

சி.எஸ்.சிவள்ளி, கிரீஷ் கர்னாட் ஆகியோரின் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏழைகளுக்காக பாடுபட்டவர் சி.எஸ்.சிவள்ளி என்று புகழாரம் சூட்டி உறுப்பினர்கள் பேசினர்.

இரங்கல் தீர்மானம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்ட சபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் சபையின் மந்திரியாக இருந்தபோது மறைந்த சி.எஸ்.சிவள்ளி, இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் தாக்கல் செய்தார். அந்த தீர்மானம் மீது முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

எனது மந்திரிசபையில் மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மிக எளிமையான, நேர்மையான அரசியல்வாதி. அவர் திடீரென மரணம் அடைந்தது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் ஏழை மக்களின் நலன் களுக்காக பாடுபட்டார். தன்னை தேடி வருபவர்களுக்கு உதவிகளை செய்தார். நேரம், காலம் பார்க்காமல் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்தகையவர் மரணம் அடைந்தது கர்நாடகத்திற்கு பெரிய இழப்பு.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

அக்கறை காட்டவில்லை

எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசுகையில், “மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி, விவசாயிகள், ஏழை மக்களுக்காக போராடியவர். அவர் ஏழை குடும்பத்தில் பிறந்து மந்திரி பதவியை அலங்கரித்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்“ என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, “மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளி, ஏழை குடும்பத்தில் பிறந்து தனது போராட்டம் மூலம் அரசியலில் சாதித்தவர். அவர் ஏழை மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்தார். உப்பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது உதவியாளர் ஒருவரை நியமித்தார். அங்கு வரும் தனது தொகுதியை சேர்ந்த நோயாளிகளை அந்த உதவியாளர் கவனித்துக் கொண்டார். அவர் தனது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவில்லை. இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டியவர் திடீரென மறைந்தது அதிர்ச்சியை அளித்தது.

கர்நாடகத்திற்கு பெருமை

முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட கிரீஷ் கர்னாட், இலக்கியத்தில் தனது சிறப்பான படைப்புகளுக்காக ஞானபீட விருது பெற்றார். கர்நாடகத்திற்கு 8 ஞானபீட விருதுகள் கிடைத்துள்ளன. அதில் அவர் 7-வது விருதை பெற்றார். இதன் மூலம் அவர் கர்நாடகத்திற்கு பெருமை தேடி தந்தார். அவர் சிறந்த நாடக கதைகளை எழுதினார். நாடகங்களில் நடித்தார். கன்னடம் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்து சாதனை புரிந்தவர்” என்றார்.

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், “சி.எஸ்.சிவள்ளி எனது சகோதரரை போன்றவர். அவருக்கும், எனக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. அவரை நான் ஒருமையில் தான் அழைப்பேன். அவர் திடீரென மரணம் அடைந்தது, எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவர் குந்துகோல் தொகுதியில் ஏழை மக்களின் கஷ்டங்களுக்கு தீர்வு கண்டார். எளிமையான அரசியல்வாதி. அதனால் அந்த தொகுதியில் அவரது மனைவி குசுமாவதி நின்று வெற்றி பெற்றார்” என்றார்.

ஜெகதீஷ் ஷெட்டர்

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காதர், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பலர் மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளி ஏழைகளுக்காக பாடுபட்டவர் என புகழாரம் சூட்டி பேசினர். அதன் பிறகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story