திருச்சி கோட்டத்தில் ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தும் பணி 100 சதவீதம் நிறைவு


திருச்சி கோட்டத்தில் ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தும் பணி 100 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 13 July 2019 4:30 AM IST (Updated: 13 July 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோட்டத்தில் ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்று தெற்கு ரெயில்வேயில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

திருச்சி, 

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ரெயில்வே தண்டவாள பாதை மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் திறந்தவெளியில் மனித கழிவுகள் கிடப்பதால் ஏற்படும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கவும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் பயோ-கழிவறை பெட்டி பொருத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி ரெயில் பெட்டிகளில் ஏற்கனவே உள்ள கழிவறைக்கு பதிலாக பயோ-கழிவறை பொருத்தும் பணி தொடங்கியது.

தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் பயோ-கழிவறை பொருத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. திருச்சி கோட்ட ரெயில்வேயில் 49 ‘டெமு’ ரெயில் பெட்டிகள் உள்பட மொத்தம் 482 பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தப்பட்டு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி 100 சதவீதம் பணி நிறைவு பெற்றது.

தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, பாலக்காடு, மதுரை, சேலம், திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் பயோ-கழிவறை பொருத்தும் பணியை திருச்சி கோட்டம் 100 சதவீதம் நிறைவேற்றி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த கழிவறை மாற்றும் பணி திருச்சி ஜங்ஷன் யார்டு, விழுப்புரம் யார்டு, பொன்மலை ரெயில்வே பணிமனை, பெரம்பூர் வேகன் பணிமனை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தியதன் மூலம் ரெயில்வே தண்டவாளங்கள், ரெயில் நிலைய தண்டவாளம் அருகில் மனித கழிவுகள் இல்லை. சுத்தமாகவும், பசுமையாகவும் காணப்படுகிறது. பயோ-கழிவறையில் மனித கழிவுகளை உயர் ரக பாக்டீரியாக்களை கொண்டு மீத்தேன் மற்றும் நீராக மாற்றப்படுகிறது” என்றனர்.

Next Story