சேதமடைந்த அங்கன்வாடி மையம்- சமுதாய கூடம் இடித்து அகற்றம்


சேதமடைந்த அங்கன்வாடி மையம்- சமுதாய கூடம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:09 PM GMT)

அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய கூட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

ஆலங்குடி, 

ஆலங்குடியில் கறம்பக்குடி செல்லும் சாலையில் கலைஞர் காலனி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிணறு அமைக்கப்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் அங்கன்வாடி மையம், சமுதாய கூடம் ஆகியவற்றுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில் அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து, கிணறு பாழடைந்து உள்ளது. இதேபோல் அங்கன்வாடி மைய கட்டிடமும் மிகவும் சேதமடைந்து மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. அதன் அருகே உள்ள சமுதாய கூட கட்டிடமும் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாழடைந்த கிணற்றை மூடிவிட்டு, அதே பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாக கூட கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும் தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சேதமடைந்த சமுதாய கூடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடங்களை இடித்து அகற்றப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய கூடத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரவும், பாழடைந்த கிணற்றை மூடிவிட்டு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story