மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில், புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம் + "||" + In Kotagiri, The intensity of work on setting up new power poles

கோத்தகிரியில், புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கோத்தகிரியில், புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
கோத்தகிரியில் பழைய மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி,

கோத்தகிரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள், கடைகள், அரசு அலுவலகங்கள், மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோத்தகிரி மின்பகிர்மான வட்டம் மூலம் மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மின்கம்பங்கள் பல ஆண்டுகளை கடந்து விட்டதால், பழுதடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதேபோல் இரும்பு மின்கம்பங்களும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன.

இதனால் மழை காலங்களில் வீசும் பலத்த காற்றின் காரணமாக அடிக்கடி மின்கம்பங்கள் விழுந்து கோத்தகிரி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுதவிர இந்த மின்கம்பங்கள் குறைந்த உயரம் கொண்டவையாக இருந்தன. இதனால் மின்கம்பிகள் தாழ்வாக சென்றதால், சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது, மின்சார கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.

இதையடுத்து மின்வாரியம் சார்பில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய மின்கம்பங்கள், பழைய மின்கம்பங்களை விட அதிக உயரம் கொண்டவை. கோத்தகிரி பஸ்நிலையம், டானிங்டன், குன்னுார் சாலை, கேர்பெட்டா சாலை, தாசில்தார் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன.

இந்நிலையில் நேற்று பராமரிப்பு பணிக்காக கோத்தகிரி பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. பழைய மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களில், மின்சார கம்பிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இது குறித்து மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் மாதன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைவதற்கு முன்னதாக கோத்தகிரி நகரில் உள்ள பழுதடைந்துள்ள அனைத்து மின்கம்பங்களும் மாற்றியமைக்கப்பட்டு, புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும்.

மேலும் காற்றின் காரணமாக மின்சார கம்பிகள் ஒன்றோடொன்று உரசுவதால் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கும் வகையில் குடியிருப்புகளுக்கு மின்சார கம்பிகளுக்கு பதிலாக கேபிள் மூலம் மின் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறைந்த மின்னழுத்த குறைப்பாட்டை நீக்கும் வகையில் கோத்தகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 31 புதிய மின் மாற்றிகளும் அமைக்கப்படுகின்றன, இதில் 17 மின்மாற்றிகள் அமைக்கும் பணி நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...