ஒருதலைக்காதலால் விபரீதம், மாணவியை காரில் கடத்த முயற்சி - பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


ஒருதலைக்காதலால் விபரீதம், மாணவியை காரில் கடத்த முயற்சி - பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 4:00 AM IST (Updated: 13 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஒருதலைக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருமத்தம்பட்டி,

திருப்பூரை சேர்ந்த வக்கீல் ஒருவரின் மகள் கோவை அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். அப்போது காரில் வந்த 2 பேர் கல்லூரி அருகே அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து காரில் கடத்த முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன அவர்கள், மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை காரில் கடத்த முயன்ற 2 பேரை கோவையை அடுத்த தெக்கலூர் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் ஒலக்காடு பகுதியை சேர்ந்த அழகர் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 25), அவருடைய நண்பர் திருப்பூர் சாதிக் பாட்ஷா நகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவரின் மகன் அப்துல் ரகுமான் (24) என்பது தெரியவந்தது. ரஞ்சித்குமார் திருப்பூரில் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். ரஞ்சித்குமார் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அவர் அந்த மாணவியை கட்டாய திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் அவரை காரில் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story