திருவாரூரில், மு.க.ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு - தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 41 பேர் கைது


திருவாரூரில், மு.க.ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு - தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 41 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 4:45 AM IST (Updated: 13 July 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஜான்பாண்டியனை பற்றி ஒருமையில் பேசியதாக கூறி திருவாரூரில், மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தமிழக சட்டசபையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் குறித்து ஒருமையில் பேசியதாக கூறி அந்த கட்சியினர் நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மு.க.ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஆரோக்கியதாஸ்(வடக்கு), ரஜினிபாண்டியன்(தெற்கு), நகர செயலாளர் பாவா உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரின் உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருவாரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உருவபொம்மையை எரித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story