ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முயன்ற பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் கைது - ஆதரவு தெரிவிக்க வந்த 8 பேரும் கைதானார்கள்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முயன்ற பேரழிப்புக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனினையும், அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் வேளாண்மை மானிய கோரிக்கையின்போது அறிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்த கோரிக்கை நிறைவேறும் வரையும் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு தடையும் விதித்தனர். ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 6 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8 மணி வரை யாரும் வரைவில்லை. இதனால் லெனினை அவரது வீட்டில் வைத்தே கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சென்று போலீசார் தேடினர்.
மேலும் தஞ்சை-திருச்சி சாலையில் சென்ற கார்களை எல்லாம் போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். ஆனால் லெனினை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் லெனினுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க வந்த தமிழ்தேசிய விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தியாகு, தமிழர் அறம் அமைப்பை சேர்ந்த ராமசாமி, உழைக்கும் மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தம்பி.மோகன்ராஜ் மற்றும் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இந்த நிலையில் லெனின் உண்ணாவிரதம் இருப்பதற்காக தனது இயக்க நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகம் அருகில் காரில் வந்து கொண்டிருந்தார். அந்த காரை வழிமறித்த போலீசார், காரின் உள்ளே இருந்த லெனினை கீழே இறக்கி அவரையும், அவருடன் வந்தவர்களையும் போலீஸ் வேனில் ஏறும்படி கூறினர். ஆனால் வேனில் ஏற மறுத்த லெனின், உண்ணாவிரதம் இருக்க வழிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இதனால் அவர் காரின் அருகே தரையில் அமர்ந்தார். உடனே அவரையும், அவருடன் வந்த நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story