பணம், அதிகாரத்துக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. கருத்து


பணம், அதிகாரத்துக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. கருத்து
x
தினத்தந்தி 12 July 2019 11:30 PM GMT (Updated: 12 July 2019 9:12 PM GMT)

பணம், அதிகாரத்துக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல என்று அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு, 

பணம், அதிகாரத்துக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல என்று அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

முதல்-மந்திரியின் மனைவி

முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா. இவர் ராமநகர் சட்டசபை தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமாரசாமிக்கு அதிருப்தி இல்லை

சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சட்டசபை திங்கட்கிழமைக்கு(15-ந் தேதி) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக முதல்-மந்திரி குமாரசாமிக்கு அதிருப்தி எதுவும் இல்லை. அவர் பிரச்சினையின்றி உள்ளார். அரசியலில் இதுபோன்று நடப்பது சகஜம் தான்.

நாங்கள் 30 ஆண்டுகளாக அரசியல் நடைமுறைகளை பார்த்து வருகிறோம். எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிருப்தி ஏற்படும். ஆனால் குமாரசாமிக்கு அதிருப்தி இல்லை. எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நல்லது இல்லை

ராஜினாமா செய்து எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் இன்னும் அங்கீகரிக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக சபாநாயகரை சந்திக்க வேண்டி உள்ளது. அப்போதும் அவர்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் முடிவில் இருந்து மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் மக்கள் சேவை செய்ய வேண்டும். ஆனால் வெற்றிபெற்ற பிறகு பணம், அதிகாரத்துக்காக கட்சியை விட்டு செல்வது நல்லது இல்லை. ராஜினாமா முடிவின் மூலமாக அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது மக்களுக்கு தவறான எண்ணம் தோன்றியுள்ளது. கட்சி, அரசியல் என்றால் சின்ன, சின்ன பிரச்சினைகள் இருப்பது வழக்கம் தான். அதை உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story