100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 9:13 PM GMT)

100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக நடப்பு நிதியாண்டில் 824 பண்ணைக் குட்டைகள் ரூ.8 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட உள்ளன. மழை பெய்யும்போது நிலத்தில் வழிந்தோடுகிற மழைநீரை சேகரித்து வைத்து, பயிர்கள் பாசன நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும்போது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர்ப்பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பண்ணைக் குட்டைகள் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமைப்பாகவும் விளங்குவதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர மாவட்டமான புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் 824 பண்ணைக் குட்டைகள் அமைக்க அரசாணை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 250 விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் வருகிற 25-ந் தேதிக்குள் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், திருக்கோகர்ணம் உதவி செயற்பொறியாளர், அறந்தாங்கி ராஜேந்திரபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story