மாவட்ட செய்திகள்

இந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை + "||" + Marine ownership of India Federal Government should protect

இந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை

இந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை
இந்தியாவின் கடல் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை விடுத்துள்ளது.
நாகர்கோவில்,

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், ஒருங்கிணைப்பாளர் டோனி மற்றும் திருத்தமிழ்தேவனார், மீனவர் ஆர்வலர் ஜெயசுந்தரம், கடிகை ஆன்றனி, புதூர் அருட்பணியாளர் பெல்லார்மின், பல்தசார் சுபின் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 15-2-2012 அன்று கேரள கடல் பகுதியில் 21 நாட்டிக்கல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். முதலில் குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, கேரள போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 2 இத்தாலி வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இத்தாலி அரசு இந்தியாவுக்கு கடலில் 12 நாட்டிக்கல் வரை மட்டுமே உரிமை உள்ளது, எனவே இவ்வழக்கை நடத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை. சர்வதேச நீதிமன்றத்தில் தான் வழக்கு நடத்தப்பட வேண்டும் என இத்தாலி அரசின் மனு கேரள ஐகோர்ட்டிலும், டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நீதிமன்றம் இரண்டு நாடுகளும் தங்களது வாதத்தை எழுத்துவடிவில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு சர்வதேச நடுவர் நீதிமன்ற உத்தரவை ஏற்று இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. இதைத்தொடர்ந்து நெதர்லாந்து சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் இறுதி விவாதத்துக்கு வந்துள்ளது. இதன் தீர்ப்பு இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தால் இந்தியாவின் இறையாண்மைக்கும், பலகோடி இந்திய மீனவர்களது உரிமைக்கும் மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இறையாண்மையை காப்பாற்றவும், பல கோடி மீனவர்களின் 200 நாட்டிக்கல் மைல் வரை பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை பாதுகாக்கவும், இந்தியாவின் கடல் உரிமையை பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தெற்காசிய மீனவர் தோழமை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.