குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு


குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 4:42 PM GMT)

குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, குடிமராமத்து பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஏரி பாசனதாரர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடிநில கோட்டத்தில் 30 ஏரிகள் புனரமைக்கும் பணிக்காக ரூ. 10 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகளும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 9 ஏரிகளும், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 30 ஏரிகளிலும் தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி, மதகுகள் புனரமைத்தல், சீரமைத்தல், வரத்து கால்வாய் தூர்வாரும் பணி, ஏரி பாசன கால்வாய் புனரமைக்கும் பணி மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதனை அகற்றி எல்லையினை வரையறுக்கும் பணிகளை இந்த திட்டத்தில் மேற்கொள்வதற்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், ஏரி நீரினை பயன்படுத்தும் ஏரி பாசனதாரர்கள், விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவீத தொகையும் செலவிடப்பட உள்ளது.

ஏரி நீரை பயன்படுத்தும் 50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் மூலம் சங்க பொறுப்பாளர்களை தேர்வு செய்து முறையாக சங்கம் பதியப்பட்டு விவசாய சங்கத்தினரே முன்னின்று பணிகளை செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகளுக்காக தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் 1,511 ஏரிகளை தேர்வு செய்து ரூ.331.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரணி ஆறு வடிநில உபகோட்டத்தை சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் உள்ள 28 ஏரிகளில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் பதிவு செய்யப்பட்டு இந்த சங்கத்தின் மூலம் குடிமராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஆரணி ஆறு செயற்பொறியாளர் (பொறுப்பு) தேவராஜன், உதவி செயற்பொறியாளர் முருகன், கலால் உதவி ஆணையர் செல்வம், திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story