போலி அடையாள அட்டை மூலம் ஆன்லைன் ரெயில் டிக்கெட் விற்பனை டிராவல்ஸ் உரிமையாளர் கைது
போலி அடையாள அட்டை மூலம் ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
போலி அடையாள அட்டை மூலம் ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
புகார்
ஆன்லைன் மூலம் இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதிக தூரம் செல்லக் கூடிய பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகளவில் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் அதிகளவில் நடக்கின்றன.
இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படை மதுரை கோட்ட ஆணையாளர் ஜெகநாதனுக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் வந்தது. அதில், “ஒரு சிலர் ஆன்லைனில் போலி அடையாள அட்டைகளை பதிவு செய்து, ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அந்த டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிக கட்டணத்துடன் இ-டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. தட்கல் முறையில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலி அடையாள அட்டைகளை பதிவு செய்து ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்பவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறப்பட்டிருந்தது.
டிராவல்ஸ் உரிமையாளர் கைது
இந்த மனு மீது விசாரணை நடத்த நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கிரணுக்கு கோட்ட ஆணையாளர் ஜெகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், அவரும், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனும் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் நெல்லையை அடுத்த சுத்தமல்லி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பாபு சேகர் (வயது 50) என்ற டிராவல்ஸ் உரிமையாளர் ஆன்லைனில் போலி அடையாள அட்டை மூலம் ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள 41 ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான பாபு சேகரை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story