கஜா புயலில் சேதமடைந்த அரசு மகளிர் கல்லூரியின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு


கஜா புயலில் சேதமடைந்த அரசு மகளிர் கல்லூரியின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:00 PM GMT)

கஜா புயலில் சேதமடைந்த புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? என மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், வரலாறு, வணிகவியல், ஆங்கிலம் மற்றும் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.பி.ஏ. உள்ளிட்ட இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லூரியில் தற்போது மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய கஜா புயல் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியையும் விட்டு வைக்கவில்லை. புயல் தாக்கியதில் கல்லூரி வளாகத்தில் இருந்த பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. மேலும் கல்லூரியின் சுற்றுச்சுவரும் ஆங்காங்கே உடைந்தது.

புயல் தாக்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. இதனால் கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் இரவில் சமூக விரோதிகள் கல்லூரிக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விடுதிகள் மற்றும் புதுக்கோட்டை நகரில் உள்ள மாணவிகள் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் உடைந்த பகுதிகளின் வழியாக வந்து செல்கின்றன. இதுபோல கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டிடங்களும், ஒரு சில இடங்களில் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு உள்ளன.

மேலும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை வசதிகளும் இல்லை. இதனால் கல்லூரி மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கல்லூரியின் முன்பு உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். மேலும் கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுக்க வேண்டும். கல்லூரி முன்பு உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story