வேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


வேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 14 July 2019 5:00 AM IST (Updated: 14 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வீட்டில் இருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட பையில் ரூ.27 லட்சத்து 24 ஆயிரம் சிக்கியது.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதுவரை அ.தி.மு.க. கூட்டணிக்கட்சி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் 9 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனால் வேலூர் தேர்தல் களம் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.

தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறையினரும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதா?, வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஏழுமலை வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை 11 மணியளவில் 5 பேர் கொண்ட வரிமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஏழுமலையின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி விட்டு வீட்டில் சோதனை செய்ய முயன்றனர்.

வருமான வரித்துறையினரை கண்டதும் ஏழுமலையின் வீட்டில் இருந்த நபர் வீட்டின் பின்புறம் பணப்பையை வீசியதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்த அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில், ரூ.27 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து ஏழுமலையிடம் விசாரித்தனர். அதற்கு ஏழுமலை, அந்த பணம் தன்னுடையது என்றும், நிலம் மற்றும் வீடு வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். அதில் கிடைத்த பணத்தை வீட்டில் வைத்திருந்தேன். வீட்டிற்குள் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வருவதை பார்த்து பயந்து வீட்டில் இருப்பவர்கள் பணப்பையை வெளியில் வீசிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனை ஏற்காத அதிகாரிகள் நிலம், வீடு வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கான ஆவணங்களை காண்பிக்கும்படி கூறியதாகவும், அதற்கு ஏழுமலை எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.27 லட்சத்து 24 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஏழுமலையின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை சுமார் 8 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை நடந்தது. வருமான வரித்துறையினர் சோதனை முடித்து விட்டு வெளியே வரும்போது கையில் ஒரு கைப்பை மற்றும் கேரிபேக் வைத்திருந்தனர். அதில் பணம் இருந்ததா?, அல்லது ஆவணங்கள் இருந்ததா? என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து வருமான வரித்துறையினர், ஏழுமலையின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வேலூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் ரூ.27 லட்சத்து 24 ஆயிரம் எண்ணப்பட்டு, தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் சேர்க்கப்பட்டது.

இதேபோன்று கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருடைய மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான கதிர்ஆனந்த் நடத்தி வரும் பொறியியல் கல்லூரி, தி.மு.க. விவசாய அணி வேலூர் மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அதேப்பகுதியில் உள்ள அவருடைய உறவினரின் வீடு, அருகில் உள்ள அவருடைய சிமெண்டு குடோன், வஞ்சூர் ஊராட்சி தி.மு.க. துணை செயலாளர் பெருமாள், செங்குட்டை கல்புதூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அஸ்கர் அலி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சிமெண்டு குடோன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசனின் உறவினரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. வீட்டில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் புத்தம்புதிய 500, 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது, அதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக வார்டு எண், பூத் நம்பர், ஏரியாபெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையினர் சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதால் இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story