மாவட்ட செய்திகள்

பழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை + "||" + pon Manikivel consulted with the Idol Trafficking Unit of Palani as 2nd day

பழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை

பழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பழனியில் 2–வது நாளாக முகாமிட்டு சிலை கடத்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பழனி,

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நடந்த போது, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழனி கோவில் இணை ஆணையரான கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் ஓராண்டாக விசாரணை எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனியில் முகாமிட்டு சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், ஐம்பொன் சிலையை வைத்துவிட்டு, நவபாஷாண சிலையை கடத்த ஸ்தபதி முத்தையா தலைமையில் திட்டமிடப்பட்டது அம்பலமானது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 5 துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் மீண்டும் பழனிக்கு வந்தனர். வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பழனி பாலாறு–பொருந்தலாறு இல்லத்துக்கு வந்தார். பின்னர் அவர் ஏற்கனவே வந்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி அரசு அருங்காட்சியக சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ராம்குமார் என்பவரை உத்தரபிரதேச மாநிலம் சோனாலி என்ற இடத்தில் போலீசார் கைது செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் இரவில் பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும், அதை மீட்டு கொண்டு வருவதில் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. காலம் தாழ்த்தியதுடன் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் சிலை கடத்தல் வழக்குகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் சொந்த பணத்தில் இருந்து தங்கள் குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று 2–வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கை உத்வேகம் பெற்றுள்ளதால் அடுத்து என்ன எஅதிரடி நடவடிக்கை இருக்குமோ என சிலை கடத்தல்காரர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.