குமாரபாளையம் நகராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்


குமாரபாளையம் நகராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 7:45 PM GMT)

குமாரபாளையம் நகராட்சியில் ரூ.36½ லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகராட்சி பொது நிதித்திட்டங்களின் கீழ் நிறைவுற்ற திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு, குமாரபாளையம் நகராட்சியில் ரூ.36½ லட்சம் மதிப்பிலான பல்வேறு நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி காவேரி நகர் மாரியம்மன் கோவில் மற்றும் மயானம் ஆகிய பகுதிகளில் படித்துறையுடன் கூடிய குளியல் பகுதி மற்றும் சிறு நடைபாலம், 7-வது வார்டு சத்தியாபுரி பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர் மூழ்கி மின் மோட்டார் பொருத்தி, மோட்டார் அறையுடன் கூடிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, வார்டு எண் 2, 28, 11, 25-ல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி எந்திரங்கள் என பல்வேறு நிறைவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர், குமாரபாளையம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.50.40 லட்சம் மதிப்பில் 25 மின்கலத்தால் இயங்கும் குப்பை கொண்டு வரும் வாகனங்களையும், ரூ.16.80 லட்சம் மதிப்பில் 3 எண்ணிக்கையில் இலகு ரக வாகனங்களையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார். அதனைத்தொடர்ந்து குமாரபாளையம் நகராட்சி காவேரி நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்க படித்துறை கட்டித்தரப்பட்டுள்்்்்்்ளது. இனிமேல் தண்ணீரில் இறங்காமல் துணிதுவைக்கும் விதமாக கல் படித்துறையுடன் கட்டப்பட்டு, குழாய் மூலமாக தண்ணீர் வரும் வகையில் காவேரி நகர் பகுதியில் 2 இடங்களில் மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி சிரமப்படுவதை போக்கும் வகையில், 1 லிட்டர் 1 ரூபாய் நாணயம் செலுத்தியவுடன் வரும் வகையிலும் 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்்க்கு வழங்கும் தானியங்கி எந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் 33 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி எந்திரங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த கருவிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சாயப்பட்டறையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு மையம் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தார்.

எனவே இப்பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் விரைவில் சாயப்பட்டறை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தால் உடனடியான அரசு அப்பகுதியில் சுத்திகரிப்பு மையம் அமைத்திட தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்்்்்்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மரகதவள்ளி, தாசில்தார் தங்கம், குமாரபாளையம் நகர வங்கி தலைவர் ஏ.கே.நாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story