குறைந்த விலையில் உரம் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது


குறைந்த விலையில் உரம் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 7:48 PM GMT)

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து குறைந்த விலையில் உரம் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). நில புரோக்கர். இவருக்கும், கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஆத்மா சிவக் குமார் (49) என்பவருக்கும் இடையே நிலம் வாங்கி, கொடுத்ததில் பழக்கம் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து ஆத்மா சிவக்குமார் இந்தோனேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு உரம் வருகிறது. அதை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என சிவக் குமார், அவரது நண்பர் பொன்னுசாமி (45) ஆகியோரிடம் தெரிவித்து உள்ளார். இதை நம்பி சிவக்குமார் ரூ.35 லட்சமும், பொன்னுசாமி ரூ.10 லட்சமும் ஆத்மா சிவக்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில் ஆத்மா சிவக்குமார் உரம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ஆத்மா சிவக்குமாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிவக்குமார் ரூ.35 லட்சம் வாங்கி கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஆத்மா சிவக்குமார் மீது நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் கொடுத்தார். அவர் இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுபாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆத்மா சிவக் குமார் குறைந்த விலையில் உரம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிமும் ரூ.45 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆத்மா சிவக்குமாரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story