சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,832 வழக்குகளுக்கு சமரச தீர்வு


சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,832 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 14 July 2019 3:30 AM IST (Updated: 14 July 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,832 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள் முனுசாமி, குணவதி மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், மூத்த வக்கீல்கள் உள்பட கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பேசுகையில், இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து தீர்வு காண வேண்டும் என்றால் காலவிரயம் ஏற்படும். எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பினர் முன்னிலையில் விசாரித்து நிரந்தர தீர்வு காண்பதற்காக இதுபோன்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் யார் வெற்றி? யார் தோல்வி? என்று இல்லாமல் சமரச முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இதுபோன்ற மக்கள் நீதிமன்றத்தை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

சேலம் கோர்ட்டில் 9 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 7 ஆயிரம் வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி காசோலை வழக்கு, சிவில் வழக்குகள் போன்றவை சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் முன்னிலையில் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. சேலம் உள்பட மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 13 ஆயிரத்து 889 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 1,832 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் ரூ.16 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரத்து 238 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மைதிலி (வயது 23). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அப்பகுதியில் நடந்து சென்றபோது, கார் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக மைதிலி, இழப்பீடு கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதன்படி, பாதிக்கப்பட்ட மைதிலிக்கு ரூ.97 ஆயிரத்து 400-க்கான இழப்பீடு தொகைக்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வழங்கினார்.

Next Story