மேட்டூரில் மோட்டார் சைக்கிளை குடிபோதையில் ஓட்டி வந்தவரை அமர வைத்து தண்டனை வாட்ஸ்-அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு


மேட்டூரில் மோட்டார் சைக்கிளை குடிபோதையில் ஓட்டி வந்தவரை அமர வைத்து தண்டனை வாட்ஸ்-அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 July 2019 3:45 AM IST (Updated: 14 July 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் மோட்டார் சைக்கிளை குடிபோதையில் ஓட்டி வந்தவரை சாலையோரம் அமர வைத்து போதை தெளிந்தவுடன் அந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பும் வீடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர், 

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் கஜா புயல் போன்று மக்கள் கலங்கிய காலக்கட்டங்களில் பலருக்கு உதவிபுரிய ஒரு இணைப்பு பாலமாக இருந்தது என்றால் மிகையில்லை. ஆனால் சமீபகாலமாக பலர், விபத்து மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறும் போது கூட காயம் அடைந்தவர்களை மீட்பதை விட அந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்புவதிலேயே குறியாக உள்ளனர்.

இதனால் மக்களிடம் மனித நேயம் மறைந்து வருகிறதோ? என்ற கவலை ஏற்பட தொடங்கி உள்ள நிலையில், சில சர்ச்சைக்குரிய பதிவுகளும் அவ்வப்போது இந்த வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறது. அதுபோன்ற ஒரு பதிவு தான் மேட்டூர் நகரில் வசிக்கும் மக்களின் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் வலைத்தள பதிவுகளில் வைரலாகி வருகிறது.

மேட்டூர் கருமலைக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போலீசாருடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்த போது, அந்த நபர் மது அருந்தி இருந்ததாகவும், போலீசாரை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரை சற்று கடுமையான வார்த்தைகளால் திட்டி அப்பகுதியில் சாலையோரம் அமர வைத்தார். இந்த தண்டனையால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சிறிது நேரத்திற்கு பிறகு குடி போதை தெளிந்து, போலீசாரிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு தன்னை விடுவிக்குமாறு கெஞ்சினார். இதையடுத்து அந்த நபரை எச்சரிக்கை செய்து சப்-இன்ஸ்பெக்டர் விடுவித்தார்.

இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் படம்பிடித்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த வலைத்தள பதிவு மேட்டூர் நகர மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபோன்ற பதிவுகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு விழிப்புணர்வுக்கு பயன்படும் என்று நாம் நினைத்தாலும், கடமையை செய்யும் போலீஸ் அதிகாரிகளின் சில தடித்த வார்த்தைகள் மட்டுமே வாட்ஸ்-அப்புகளில் வைரலாகும் காட்சிகளில் பேசப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வருங்காலங்களில் சரிவர பணியில் ஈடுபட முடியாமல் வேதனையில் ஆழ்த்தி விடும் என்பதை வலைத்தள பதிவுகளை பரப்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story