விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலப்பரப்பை குறைக்ககூடாது - தமிழக அரசுக்கு கோரிக்கை


விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலப்பரப்பை குறைக்ககூடாது - தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலப்பரப்பை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்,

மாணிக்கம்தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விருதுநகர்-சாத்தூர் இடையே கடந்த 2008-ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டு அத்திட்டம் நிறைவேற்றப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் மத்திய அரசின் தொழில் முதலீட்டு மையம் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழக அரசு பரிந்துரை செய்யாததால் அத்திட்டமும் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தென்மாவட்டங்களை தொழில் மயமாக்கும் தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தார்.

அதன் அடிப்படையில் விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் சிறப்பு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு விருதுநகர்-சாத்தூர் இடையே 2,040 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர், விருதுநகர் சிப்காட் தொழிற்பேட்டைக்கான 2040 ஏக்கர் நிலத்தின் மதிப்பு அதிகம் உள்ளதால் தொழிற்பேட்டைக்கான நிலப்பரப்பு 1540 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள் ளார்.இந்த அறிவிப்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் தொழில்துறை திட்டமிட்டுத்தான் சிப்காட் தொழிற்பேட்டைக்கு 2,040 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் தொழிற்பேட்டைக்கான நிலப்பரப்பு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என தெரியவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சிப்காட் தொழிற்பேட்டை பயன்பாட்டிற்கு வருவதை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் இந்த மாவட்டத்தில் சிறுகுறு தொழில் முனைவோர்களும் அரசின் தொழிற்பேட்டை அமைந்தால் அதில் தொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ளார்கள். இந்தநிலையில் சிப்காட் தொழிற்பேட்டையின் நிலப்பரப்பை குறைப்பது ஏற்புடையது அல்ல. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் இத்தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிட்ட நிலையில் தொழிற்பேட்டையின் அமைப்பு பணியில் மாற்றம் செய்வது தொழில் மயமாக்கும் அவரது எண்ணத்திற்கு முரணாக அமையும். எனவே தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டப்படி விருதுநகர்-சாத்தூர் இடையே 2,040 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலப்பரப்பை குறைக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story