தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வளர காரணமாக இருந்த மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் வெங்கையா நாயுடு பேச்சு


தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வளர காரணமாக இருந்த மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 13 July 2019 11:30 PM GMT (Updated: 13 July 2019 9:26 PM GMT)

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வளர காரணமாக இருந்த அமைப்புகளில் ஒன்றான மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

மைசூரு, 

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வளர காரணமாக இருந்த அமைப்புகளில் ஒன்றான மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

மைசூருவில் உள்ள மண்டல கல்வி மைய வளாகத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் பெயரில் ஒரு அரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் நமக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது. ஆசிரியர்களை விட பெரியது எதுவும் இல்லை. நாம் 5 அம்சங்களை என்றைக்கும் மறந்து விடக்கூடாது. முதலில் நமக்கு உயிர் கொடுத்த தாய். 2-வது நம்மை வாழவைக்கும் பூமி. 3-வது தாய் மொழி. 4-வது நாட்டுப்பற்று. 5-வது கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்

இந்த 5 அம்சங்களையும் நன்றாக புரிந்து கொண்டால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். ஆசிரியர்கள் இல்லாமல் நாம் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் தாய், தந்தைக்கு பிறகு 3-வது இடத்தில் குரு இருக்கிறார்.

இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் மைசூருவில் உள்ள இந்திய மொழிகளின் ஆராய்ச்சி கழகத்திற்கு சென்றார். அங்கு நடந்த மொழிகள் ஆராய்ச்சி கழகத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கல்வெட்டுகளை திறந்து வைத்த அவர், பின்னர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மொழிகளை காக்க பாடுபட்டு...

மைசூருவில் அமைந்துள்ள மொழிகள் ஆராய்ச்சி கழகம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த மொழிகள் ஆராய்ச்சி கழகம் கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதுமுதல் கடந்த 50 ஆண்டுகளாக இந்திய நாட்டில் உள்ள அனைத்து மொழிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்துள்ளது. இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக இந்த மொழி ஆராய்ச்சி கழகம் பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. அதற்காக நான் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த மொழி ஆராய்ச்சி மையம் இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள், எழுத்து வடிவமற்ற மொழிகள், மலைவாழ் மக்கள் பேசும் மொழிகள், அழிந்து வரும் மொழிகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அந்த மொழிகளை காக்கவும் பாடுபட்டு வருகிறது.

சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும்

இந்த மொழி ஆராய்ச்சி கழகத்தில் யூ.டி.ஆர்.சி., என்.டி.எம்., டி.எஸ்.ஐ. உள்பட 5 தனிப்பிரிவுகள் உள்ளன. அந்த 5 தனிப்பிரிவுகளும் மொழிகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. மொழிகளை வளர்ச்சி அடையச் செய்வதற்காக நிதியும், தொழில்நுட்பங்களும் இந்த மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஒடிசா, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அமைப்புகளில் இந்த மொழி ஆராய்ச்சி கழகமும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மொழி ஆராய்ச்சி கழகத்திற்கு என்று ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும். அதன்மூலம் பழங்கால பேச்சுவழக்கு மொழிகளையும் காப்பாற்ற இந்த மொழி ஆராய்ச்சி கழகம் பாடுபடும். அது இந்த மொழி ஆராய்ச்சி கழகத்தின் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் வஜூபாய் வாலா, மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, மேயர் புஷ்பலதா ஜெகன்நாத், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story