மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் இடி- மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை


மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் இடி- மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 14 July 2019 5:00 AM IST (Updated: 14 July 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் இடி- மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

விழுப்புரம், 

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடனும், பயங்கர இடி- மின்னலுடனும் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் 2 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான வீனஸ் நகர், கணே‌‌ஷ்நகர், கே.கே.நகர், கம்பன் நகர், சுதாகர் நகர், மணிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் மழையினால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. ரெயில் நிலையம் அருகில் உள்ள பழைய சிந்தாமணி தெருவில் கோலியனூரான் வாய்க்கால் நிரம்பி சாக்கடை நீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு இருக்க நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள களமருதூர், பிள்ளையார்குப்பம், கெடிலம், மடப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர், பேரங்கியூர், மேட்டுக்குப்பம், சரவணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாமந்தூரில் சாலையோரமாக இருந்த ராட்சத புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற வேன் மீது மரக்கிளைகள் விழுந்ததில் வேனின் மேல்பகுதி சேதமடைந்தது. அதில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த மழை காரணமாக திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் பகுதியில் தாழ்வாக உள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது.

மேலும் பலத்த மழையினால் சரவணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அரும்பட்டு கிராமத்தில் 5 உயர் மின்னழுத்த கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் நள்ளிரவில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று சாய்ந்து விழுந்து மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர், ரி‌ஷிவந்தியம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வறண்டு கிடந்த மேலப்பழங்கூர், மாடாம்பூண்டி, கடம்பூர், மரூர் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. நீர்வரத்து காரணமாக கடம்பூர் வெட்டேரி கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. ஆகவே வெட்டேரி கரையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், பிரம்மதேசம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 1,423.80 மி.மீ. மழையும், சராசரியாக 33.90 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு தாலுகா வாரியாக மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

திருக்கோவிலூர்- 408

சங்கராபுரம்- 293.80

செஞ்சி- 217.60

விழுப்புரம்- 130

கண்டாச்சிபுரம்- 75

உளுந்தூர்பேட்டை- 67

திண்டிவனம்- 51

விக்கிரவாண்டி- 44.60

வானூர்- 41

கள்ளக்குறிச்சி- 39.40

மேல்மலையனூர்- 33

சின்னசேலம்- 23.40

மொத்த மழை அளவு - 1,423.80 மி.மீ.

சராசரி- 33.90 மி.மீ.

Next Story