நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? 2 பேரை பிடித்து விசாரணை


நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? 2 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 14 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கீழ்வேளூர்,

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 6 மணியளவில் நாகை வந்தனர். தொடர்ந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சிக்கல் மெயின் ரோட்டில் உள்ள அசன் அலி(வயது 29) என்பவரது வீட்டிற்குள் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு குழுவினர் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அசன் அலி வெளியில் சென்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெளியில் சென்ற அசன் அலியை வரவழைத்தனர். அப்போது அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்தனர்.

மேலும் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த லேப்டாப், பென்டிரைவ் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்திகள் அங்கு இருந்ததாகவும், அதனை கண்டறிந்து கைப்பற்றியதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசன் அலி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அட்டை பெட்டியில் போட்டு கட்டினர். மேலும் சில ஆவணங்களை துணிப்பையில் வைத்து கட்டாக கட்டினர். இவை அனைத்தையும் அதிகாரிகள், தாங்கள் வந்த காரில் எடுத்து சென்றனர். தொடர்ந்து அசன் அலியை விசாரணைக்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் மற்றொரு குழுவினர் அசன் அலி உறவினரான நாகை அருகே மஞ்சக்கொல்லை புதின் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது (32) என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அவர் இல்லாததால், அவரது வீட்டில் இருந்தவர்களிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப் உள்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஹாரிஸ் முகமதுவையும் விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்லவோ, வெளியில் இருந்து யாரையும் வீட்டிற்கு உள்ளேயோ அனுமதிக்கவில்லை. 

Next Story