3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைப்பு அரசு எந்திரம் முடக்கம் - மக்கள் ஆதங்கம்


3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைப்பு அரசு எந்திரம் முடக்கம் - மக்கள் ஆதங்கம்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 9:49 PM GMT)

கர்நாடகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு எந்திரம் முடங்கி உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு எந்திரம் முடங்கி உள்ளது. இதன் காரணமாக மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

ஓட்டல்களில் எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட்டணி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேதி எப்போது? என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை தங்களது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க, அவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்க தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு புறநகர் எலகங்கா அருகே உள்ள ரெசார்ட் ஓட்டலிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யஷ்வந்தபுரத்தில் உள்ள ஓட்டலிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் உள்ள ரெசார்ட் ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு நாளுக்கு ரூ.3 லட்சம்

இதுபோன்று, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். மும்பையில் உள்ள ஓட்டலில் எம்.எல்.ஏ. ஒருவர் தங்கி இருக்கும் அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ.10 ஆயிரம் என்றும், காலை, மதியம், இரவு உணவுக்காக ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரையும், ஓட்டலில் பிற ஆடம்பர வசதிகளை பயன்படுத்துவதற்காக ரூ.10 ஆயிரம் வரையும் செலவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டு மொத்தமாக அந்த ஓட்டலில் 10 எம்.எல்.ஏ.க்களும் தங்குவதற்கும், அவர்களது சாப்பாடு, பிற ஆடம்பர வசதிகளுக்காக ஒரு நாளுக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபோல தான் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல்களில் அறை வாடகை, சாப்பாடு செலவு, ஆடம்பர வசதிகளுக்காக ஆகும் செலவு என ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக தெரிகிறது. ஒட்டு மொத்தமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், அங்கு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரசுப் பணிகளில் ஈடுபடாமல் ஓட்டல்களில் தங்கி உள்ளதால், அரசு எந்திரம் முடங்கி உள்ளது.

மக்கள் ஆதங்கம்

இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையும் கேலி, கிண்டல்கள் செய்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் மாநிலத்தில் பல தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. பல மாவட்டங்களில் மழை சரியாக பெய்யவில்லை, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டல்களில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டுமா? என்று மக்கள் ஆதங்கப் பட்டுள்ளனர்.

Next Story