பயிர் காப்பீடு விவகாரம்: அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவோம் என்பதா? சிவசேனாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்


பயிர் காப்பீடு விவகாரம்: அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவோம் என்பதா? சிவசேனாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 10:33 PM GMT)

அரசில் அங்கம் வகித்து கொண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறிய சிவசேனாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மும்பை, 

அரசில் அங்கம் வகித்து கொண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறிய சிவசேனாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

போராட்ட அறிவிப்பு

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் அளித்த பேட்டியில், “விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர் காப்பீடு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் வருகிற 17-ந் தேதி சிவசேனா சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார், தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு சிவசேனா இத்தகைய கேலிக்கூத்தில் ஈடுபடுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அரசில் இருந்து விலக வேண்டும்

அரசில் அங்கம் வகித்துக்கொண்டே சிவசேனா ஏன் எதிர்க்கட்சி போல நடந்து கொள்கிறது?, மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் சிவசேனாவினர் வாயை மூடிக்கொண்டு அமைதி காக்கின்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறியதும் விவசாயிகள் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்துவதாக கூறுகின்றனர். இது கேலிக்கூத்து அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.

சிவசேனா, அரசுக்கு அழுத்தம் கொடுத்து பொதுநலன் சார்ந்து இயங்க வலியுறுத்த முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சி போல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறது.

விவசாயிகளுக்கான தொகையை பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க மறுத்தால் அதை அரசு மட்டத்திலேயே கையாள முடியும். ஆனால் சிவசேனா அதை செய்யாமல் போராட்டங்கள் மூலம் சண்டை இடுகிறது. சிவசேனாவுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அரசில் இருந்து விலகி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story