குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு மங்கூன் கிராம பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மங்கூன் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் வினியோகிக்கப்பட வில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் மங்கூன் கிராமத்தில் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் பெரம்பலூர்- துறையூர் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு தற்காலிகமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story