ராமலிங்கரெட்டியுடன் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குமாரசாமி ஆலோசனை


ராமலிங்கரெட்டியுடன் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 15 July 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக ராமலிங்கரெட்டியுடன் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக ராமலிங்கரெட்டியுடன் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். 16 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டியும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் சேர்ந்து முனிரத்னா, பைரதி பசவராஜ், சோமசேகர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் ராமலிங்கரெட்டியை சமாதானப்படுத்தினால் அவருடன் சேர்ந்து மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமாவை வாபஸ் பெறுவார்கள். இதனால் கூட்டணி ஆட்சியை தக்க வைக்க 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். இதன்மூலம் கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என்று தலைவர்கள் கணக்குப்போட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில், நேற்று பெங்களூரு செட்டிஹள்ளியில் உள்ள ராமலிங்கரெட்டியின் பண்ணை வீட்டுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்றனர். அவர்கள் ராமலிங்கரெட்டியிடம் ராஜினாமாவை வாபஸ் பெறும்படியும், மற்ற 3 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மனுவையும் வாபஸ் பெற வைக்கும்படியும் வலியுறுத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. ஆனால் ராமலிங்கரெட்டி, ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்தோ, மற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை வாபஸ் பெற வைப்பது குறித்தோ எதுவும் கூறவில்லை. அவர், சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து விளக்கம் அளிப்பேன். அதன்பின்னர் தான் என்னுடைய முடிவை தெரிவிப்பேன் என்றார். இதனால் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

குமாரசாமி ஆலோசனை

இதையடுத்து ராமலிங்கரெட்டி வீட்டுக்கு சென்ற தலைவர்கள் அங்கிருந்து குமரகிருபா விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அங்கு முதல்-மந்திரி குமாரசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

மகிழ்ச்சி அளிக்கவில்லை

இதையடுத்து ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஏற்கனவே என்னுடைய முடிவை தெரிவித்து விட்டேன். சபாநாயகர் என்னை விசாரணைக்காக 15-ந்தேதி (இன்று) ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணைக்கு ஆஜராவேன். சட்டசபை கூட்டத்தொடரிலும் பங்கேற்பேன். என்னை காங்கிரசின் மிகப்பெரிய தலைவர்கள் வந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர்கள் அழைத்திருந்தால் நானே நேரில் சென்றிருப்பேன். சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்த பின்னர் என்னுடைய முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story