ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன் பா.ஜனதாவினருடன் தொடர்பில் இல்லை எம்.டி.பி.நாகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி


ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன் பா.ஜனதாவினருடன் தொடர்பில் இல்லை எம்.டி.பி.நாகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 15 July 2019 3:30 AM IST (Updated: 15 July 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன் என்றும், பா.ஜனதாவினருடன் தொடர்பில் இல்லை என்றும் எம்.டி.பி.நாகராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன் என்றும், பா.ஜனதாவினருடன் தொடர்பில் இல்லை என்றும் எம்.டி.பி.நாகராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மும்பையில் எம்.டி.பி.நாகராஜ்

பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எம்.டி.பி.நாகராஜ். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கூட்டணி ஆட்சியில் மந்திரியாகவும் இருந்தார். சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரான எம்.டி.பி.நாகராஜ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசி சமாதானம் செய்தார்கள். முதல்-மந்திரி குமாரசாமியும், எம்.டி.பி.நாகராஜை சந்தித்து சமாதானமாக பேசினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என்றும், ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்றும் எம்.டி.பி.நாகராஜ் கூறி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் திடீரென்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் எம்.டி.பி.நாகராஜ் மும்பைக்கு சென்றுவிட்டார். எம்.டி.பி.நாகராஜுடன், பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் பேச்சுவார்த்தை நடத்தியதும், எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அசோக்குடன் அவர் வந்தது தொடர்பான புகைப்படங் களும் வெளியானது. மேலும் காரில் சென்ற எம்.டி.பி.நாகராஜ் தனது முகத்தை பேப்பரால் மறைத்தபடியும் சென்றார். இதுகுறித்து மும்பையில் நேற்று எம்.டி.பி.நாகராஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தொடர்பில் இல்லை

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மும்பையில் சக எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி இருக்கிறேன். எங்களுக்குள் பிரிவு இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நானும், சுதாகரும் சேர்ந்து தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தோம். அதனால் நாங்கள் 2 பேரும் சேர்ந்து ராஜினாமாவை திரும்ப பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கூறி இருந்தேன். சுதாகர் எம்.எல்.ஏ.வை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சில காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன். நான் பா.ஜனதாவினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அசோக் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வரும் தகவல்கள் உண்மை அல்ல. அசோக்கை நான் சந்தித்து பேசவில்லை. நான் பா.ஜனதாவினருடன் தொடர்பில் இல்லை. மும்பைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்வது வாடிக்கையானது. அதுபற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.

Next Story