அம்மாபேட்டை அருகே பரபரப்பு, வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேர் கைது


அம்மாபேட்டை அருகே பரபரப்பு, வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2019 3:45 AM IST (Updated: 15 July 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 26). அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் (22), வெள்ளியங்கிரி. இவர்கள் 2 பேர் மற்றும் சதீஷ்குமார் என 3 பேரும் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தனர். இதில், வெள்ளியங்கிரிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சரவணனும், வெள்ளியங்கிரியும் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும், சதீஷ்குமாரிடம் முயல் வேட்டைக்கு செல்லலாம் என்றுக்கூறி அவரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

அதன்படி அவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் அம்மாபேட்டை அருகே உள்ள பந்தல்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது சதீஷ்குமார், வெள்ளியங்கிரியின் செல்போனை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சதீஷ்குமாரை, வெள்ளியங்கிரியும் சரவணனும் சேர்ந்து தென்னை மட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 2 பேரும் மொபட்டில் இருந்து பெட்ரோலை எடுத்து சதீஷ்குமாரின் உடலில் ஊற்றி தீ வைத்தனர். இதன்காரணமாக சதீஷ்குமாரின் உடலில் தீப்பற்றி எரிந்தது. அதனால் அவர் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அங்கு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்ய முயன்ற வெள்ளியங்கிரி மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story