வேட்டவலம், செங்கத்தில் ஏரிகள் தூர்வாரும் பணி


வேட்டவலம், செங்கத்தில் ஏரிகள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 15 July 2019 4:51 AM IST (Updated: 15 July 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

செங்கம், வேட்டவலத்தில் ஏரிகள் தூர்வாரும் பணி நடந்தது.

வேட்டவலம்

வேட்டவலம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை வைத்து அவற்றை 3 ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதற்காக பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் ஓலைப்பாடி நாவத்தாங்கல் ஏரி மற்றும் வேட்டவலம் பெரிய ஏரி குளங்கள் ஆகியவற்றில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரவும், முட்புதர்களை அகற்றி புதிய மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பதற்கு கலெக்டர் கந்தசாமியிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பணியை செய்வதற்காக கலெக்டர் அனுமதி வழங்கினார். மேலும் அவர் தேவையான உதவிகளை செய்வதற்கு உத்தர விடுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்கட்டமாக 4 பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஓலைப்பாடி நாவத்தாங்கல் ஏரி முட்புதர்களை அகற்றி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் ஏரிக்கரையை சுத்தப்படுத்தும் பணியும், நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை அமைப்பின் தலைவர் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன், செயலாளர் ஜி.டி.வினோத், பொருளாளர் கருணாகரன் மற்றும் பசுமை வேட்டவலம் அமைப்பின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் செங்கம் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வார இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி செங்கம் துக்காப்பேட்டை அருகே உள்ள வரதந்தாங்கல் ஏரியை தூர்வாரும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்றும் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதேபோல செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதி மக்களின் நீராதாரமாக விளங்கிய அம்மாகுளம் வறண்டு கிடக்கிறது. இக்குளத்தை சீரமைப்பதற்காக செங்கம் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் முடிவு செய்து, பொக்லைன் எந்திரங்கள் மூலம் அம்மா குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். விரைவில் குளம் முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். மேலும் இனி வருங்காலங்களில் இக்குளத்தில்அதிகப்படியாக தண்ணீர் சேமிக்கப்படும் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.

Next Story