கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மற்றும் பல்லடத்தி்ல் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
இந்து முன்னணியின் திருப்பூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் பக்தன், மாநில செயலாளர்கள் கிஷோர் குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில் சொத்துக்களை தனியார் மற்றும் அரசு நிர்வகித்து வருகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும். கோவில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம் என்ற சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அனைத்து இந்து கோவில்களிலும், இறைவனை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர் கைகளில் தீச்சட்டிகளை ஏந்திக்கொண்டும், குழந்தைகள், இளைஞர்கள் பலர், விநாயகர், முருகன், கருப்பசாமி உள்ளிட்ட வேடங்கள் இட்டு, கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினர் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா சிறப்புரை ஆற்றினார்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கவியரசு, ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story