டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை


டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 July 2019 11:30 PM GMT (Updated: 15 July 2019 12:06 AM GMT)

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் தகராறில் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்குமார்(வயது 24). இவர் திருப்பூர் பெரியாண்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான பார்த்திபனுடன் ஆண்டிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடையுடன் இணைந்திருக்கும் பாரில் இருந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் பாரில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், தங்கள் கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மதுபான பாருக்குள் நுழைந்துள்ளனர். அங்கு அந்த கும்பலுக்கும், மதுபானம் குடித்து கொண்டிருந்த ஒரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் தாக்கியதில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. ரத்தத்துடன், பாரில் இருந்து அந்த நபர் வெளியே ஓடி வருவதை அருள்குமார் மற்றும் அவருடைய நண்பரான பார்த்திபன் பார்த்துள்ளனர்.

அவர்கள் அந்த கும்பலிடம், மது குடிக்க வந்தவரை எதற்காக இப்படி தாக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள்குமார் வயிற்றில் குத்தியுள்ளார். கத்திக்குத்து பலமாக விழுந்ததால் குடல் சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார். இதை தடுக்க சென்ற அவருடைய நண்பர் பார்த்திபனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கும் இங்குமாக தலைதெறிக்க ஓடினார்கள்.

இருப்பினும், ஒரு சில வாலிபர்கள் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். அவர்களையும் அந்த கும்பல் விடாமல், தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. சிறிது நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். இதைப்பார்த்த அந்த கும்பல், வேகவேகமாக அவர்கள் வந்த காரிலேயே ஏறி, அங்கிருந்து தலைமறைவானார்கள். கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அருள்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை ஆம்புலன்சு மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் பார்த்திபன், ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலை(25), விக்னே‌‌ஷ்(21), ராஜமாணிக்கம்(22), பிரகா‌‌ஷ்(24) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் ஆம்புலன்சு மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் மத்திய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களிடமும், அவர்கள் உறவினர்களிடமும் தெற்கு போலீஸ் உதவி கமி‌‌ஷனர் நவீன்குமார் விசாரணை நடத்தினார். அருள்குமாரை கொலை செய்ததுடன், அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர்களையும் எதற்காக அந்த கும்பல் வெட்டியது என்றும்? அவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story