கேரளாவில் மழை பெய்யவில்லை, மதுரையில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் - மாநகராட்சி அறிவிப்பு
கேரளாவில் மழை பெய்யாத காரணத்தால் மதுரையில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை,
மதுரை மாநகருக்கு வைகை அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தது. இதனால் முல்லை பெரியாறு அணை நிரம்பி, வைகை அணைக்கு நீர் கொண்டுவரப்பட்டது.
இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஏமாற்றி விட்டது. முல்லை பெரியாறு அணை உள்ள இடுக்கி மாவட்டத்தில் கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் நேற்று (14-ந் தேதி) வரை 1,177 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 469 மி.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. அதாவது 60 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.25 அடியாகவும், வைகை அணையின் நீர்மட்டம் 28.15 அடியாகவும் உள்ளது. வைகை அணையை பொறுத்தவரை அதிகபட்சமாக 20 அடி நீர் வரை எடுக்க முடியும். அதற்கு கீழ் சகதி தான் இருக்கிறது. எனவே இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து இருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வைகை அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிற காரணத்தினால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் வருகிற 17-ந் தேதி முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது.
எந்த தேதியில் எந்த வார்டுகளில் குடிநீர் செய்யப்படும் விவரம் வருமாறு:-
17-ந் தேதி:- 21, 79, 80, 81(பகுதி), 83 (பகுதி), 65, 66, 78, 79, 85, 86, 22, 10, 11, 12, 13, 14, 15, 5(பகுதி), 6(பகுதி), 40(பகுதி), 77, 92, 93.
18-ந் தேதி:- 81(ப), 82, 83, 84 (ப), 87, 88, 89, 19, 16, 17, 18, 75 (ப), 76 (ப), 8 (ப), 9(ப), 5(ப), 41(ப), 47(ப), 5(ப), 33, 34, 88, 89, 40(ப), 41(ப).
19-ந் தேதி:- 66 (ப), 67, 74, 85, 52, 53, 54, 57, 70, 71 (ப), 72 (ப), 69, 70, 71, 40(ப), 41(ப), 37, 38, 27, 45, 46(ப), 27(ப), 35, 36, 39, 41, 43, 33, 34, 39, 89, 90, 91, 92.
20-ந் தேதி:- 50, 51, 73, 76, 75 (ப), 100 (ப), 76, 65, 66, 67 (ப), 68, 69, 71 (ப), 72 (ப), 74 (ப), 8(ப), 9 (ப), 5 (ப), 6(ப), 41(ப), 47(ப), 40(ப), 41(ப),42(ப), 38, 40, 27, 45, 46(ப), 35, 36, 39, 41, 43, 44, 34, 39, 63, 64.
எனவே மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய மாநகராட்சி சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் குறித்த புகார்களை மாநகராட்சி புகார் மைய தொலைபேசி 0452-2525252, வாட்ஸ்-அப்- 7449104104 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story