விருதுநகரில், இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடம் - அகற்ற நடவடிக்கை தேவை


விருதுநகரில், இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடம் - அகற்ற நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 15 July 2019 3:45 AM IST (Updated: 15 July 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நாராயணமடம் தெருவில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடத்தை விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் சேதம் அடைந்துள்ள அரசு கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 52 அரசு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. ஆனால் விருதுநகர் பகுதியில் மட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கடந்த வாரம் விருதுநகர் பெருமாள் கோவில் தெருவில் இடிந்து விழும் நிலையில் இருந்த வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடத்தை அகற்ற பலமுறை வலியுறுத்தி கூறிய பின்னர் வருவாய்த்துறையினர் நகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர்.

இந்த நிலையில் விருதுநகர் 21-வது வார்டில் உள்ள நாராயணமடம் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நீதித்துறைக்காக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதி பயன்படுத்தப்படாமலே இருந்து வந்ததால் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இக்கட்டிடத்தினை சமூக விரோதிகள் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்காக பயன்படுத்தும் நிலையும் இருந்து வருகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் இக்கட்டிடத்தை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மேலும் தாமதிக்காமல் இக்கட்டிடத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் இக்கட்டிடம் அகற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story