வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின்மையை போக்கும் யுனானி மருத்துவம்
வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் குழந்தையின்மையை போக்குவதற்கு யுனானி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூர்,
வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சித்தா மற்றும் யுனானி பிரிவுகளும் உள்ளன. இந்த பிரிவுகளில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.
இங்குள்ள யுனானி பிரிவுக்கு தினமும் 120 முதல் 150 பேர் வந்து சிகிச்சைபெற்று செல்கிறார்கள். தோல்நோய், நரம்புதளர்ச்சி, சிறுநீரகத்தில் கல், சோரியாசிஸ் உள்பட பல்வேறு நோய்களுக்கு இங்கு மூலிகைகளாலான மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று திருமணமாகி நீண்டநாட்கள் குழந்தை இல்லாதவர்களும் மருந்து சாப்பிட வருகிறார்கள். இதற்காக ஒருநாளைக்கு குறைந்தது 3 பேர் வருகிறார்கள்.
இவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் அவர்களுடைய உடல்அமைப்புகள் குறித்து ஸ்கேன் செய்துபார்த்து அதற்கு ஏற்றாற்போல் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. யுனானி பிரிவில் இந்த வசதி இல்லாததால், குழந்தை பாக்கியத்துக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் வெளியில் சென்று தனியார் ஸ்கேன் மையங்களில் பணம்கொடுத்து ஸ்கேன் செய்து வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் மருந்து வழங்கப்படுகிறது. மருந்து சாப்பிட தொடங்கி 3 மாதத்தில் இருந்து ஒரு வருடத்துக்குள் பெண்கள் கருத்தரித்து குழந்தைபாக்கியம் பெறுவதாக கூறப்படுகிறது. பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லாமல் இங்குள்ள யுனானி பிரிவுக்கு வருபவர்களில் சிலரும் மருந்து சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து யுனானி பிரிவில் பணிபுரியும் டாக்டர் வசிம் ஆதிர் என்பவர் கூறியதாவது:-
யுனானி பிரிவில் முழுக்கமுழுக்க மூலிகைகளால் ஆன மருந்து வகைகளே வழங்கப்படுகிறது. நரம்புத்தளர்ச்சி, தோல்வியாதி உள்பட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்துவழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைபேறு இல்லாதவர்களும் அதற்காக மருந்துசாப்பிட வருகிறார்கள். அவ்வாறு வரும் கணவன்-மனைவி இருவருக்கும் அவர்களுடைய ஸ்கேன் ரிபோர்ட் அடிப்படையில் மருந்து வழங்கப்படுகிறது.
பெரிய பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவுசெய்து சிகிச்சைபெற்றும் குழந்தை இல்லாமல் வருபவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே எடுத்த மருத்துவ பரிசோதனை அடிப்படையில் மருந்து வழங்கப்படுகிறது. இதன்படி இங்கு மருந்து சாப்பிட்ட பல பெண்கள் கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story