இடங்கணசாலையில் அரசு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்
இடங்கணசாலையில் அரசு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் மொத்தம் 3 அரசு மதுக் கடைகள் உள்ளன. இதில் மோட்டூர் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை அருகில் உள்ள இடங்கணசாலை பேரூராட்சி பாப்பாபட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்திட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பாப்பாபட்டியில் அரசு மதுக்கடை புதிதாக அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று காலையில், இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘இதே பகுதியில் ஏற்கனவே ஒரு அரசு மதுக்கடை உள்ளது. தற்போது புதிதாக இங்கு மேலும் ஒரு கடை திறக்கப்பட்டால் போக்குவரத்துக்கு இடையூறும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படும் என்பதால் புதிதாக இந்த பகுதியில் அரசு மதுக்கடை திறக்கக்கூடாது‘ என்று வலியுறுத்தினர்.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story