மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுப்பு தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு
மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மைசூரு,
மைசூரு தாலுகா ஜெயப்புரா அருகே அரசினகெரே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பூமிக்கடியில் இருந்து கொம்பு முளைத்தது போன்று தெரிந்து கொண்டிருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக இதற்கு அந்தப்பகுதி மக்கள் சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அது நந்தி சிலையாக இருக்கலாம் என்று அந்தப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர். இந்த நிலையில், அந்தப்பகுதியில் குழித்தோண்டி அதனை வெளியே எடுக்க அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்தப்பகுதியில் 15 அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு பழங்காலத்து நந்தி சிலைகள் இருந்தன. இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
அதன்பேரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், எந்த சேதமும் ஏற்படாத வகையில் பூமிக்கடியில் இருந்த 2 நந்தி சிலைகளையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். 2 நந்தி சிலைகளும் பிரமாண்டமாக காட்சியளித்தன. அதில் ஒன்று 15 அடி உயரமும், மற்றொன்று 12 உயரத்திலும் இருந்தது. இதுபற்றி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல தகவல் பரவியது.
இதனை அறிந்த பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர் களும் அங்கு வந்து நந்தி சிலைகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதையடுத்து 2 நந்தி சிலைகளையும் தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
150 ஆண்டுகள் பழமையான...
இதுகுறித்து தொல்பொருள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தி சிலைகள் ஆகும். 15 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த இந்த நந்தி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சாமராஜேந்திர உடையார் காலத்தில், இந்த நந்தி சிலைகளை மேலே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அந்த சிலைகளை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால், நந்தி சிலைகளை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் மண்ணால் அந்த சிலைகள் மூடப்பட்டுவிட்டன. நந்தி சிலைகளின் கொம்புகள் மட்டும் வெளியே தெரிந்தப்படி இருந்தன. இந்த நந்தி சிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story