கறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்


கறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சென்ற ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு, தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் நேற்று தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

இதை அறிந்த 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் இன்னமும் தங்களுக்கு மடிக்கணினியை வழங்காததை கண்டித்து உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கறம்பக்குடி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து கறம்பக்குடி சீனீகடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் 4 பகுதிகளிலும் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் தாசில்தாரை வரவழைத்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு தாசில்தார் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்பே தற்போதைய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தற்போதைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்படும் எனவும், முதன்மை கல்வி அதிகாரியிடம் இதுகுறித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story