குறைதீர்க்கும் நாள் கூட்டம்: உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 July 2019 11:00 PM GMT (Updated: 15 July 2019 7:16 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கரூர் அருகே மணவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கபுரம், கன்னிமார்பாளையம், பெருமாள்பட்டி காலனி, மருதம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை தொடர்பாக திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர காவிரிக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிண்டக்ஸ் தொட்டிகளும் பழுதடைந்திருப்பதால் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்படுகிறோம். மேலும் சில கிலோ மீட்டர் நடந்து சென்று விவசாய கிணறுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்காலிகமாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகளில் கொண்டு வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவுள்ள வெள்ளியணை பெரிய குளத்தை தூர்வாரி அதனுள் மழைநீரை சேமிக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என வெள்ளியணை தென்பாகத்தை சேர்ந்த அப்புசாமி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

கரூர் வெங்கமேடு, செல்வாநகர், அறிவொளிநகர், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், வெங்கமேடு வி.வி.ஜி. நகர் அருகே கரூர்-சேலம் ரெயில்பாதை அருகில் குப்பை சேகரிப்பு மையம் அமைத்து அதனை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அப்பகுதியில் குடிநீர் தொட்டி மற்றும் பள்ளிகள் உள்ளிட்டவை இருப்பதால் குப்பைகளால் அவை மாசடைய வாய்ப்புள்ளது. மேலும் மக்களுக்கும் சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடும. எனவே உரக்கிடங்கினை வேறு இடத்தில் ஒதுக்குப்புறமாக அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் அளித்த மனுவில், லாலாபேட்டை ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு போடப்பட்ட சிலாப் கற்கள் அகற்றப்பட்டு, அங்கு மின்விளக்கு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கடவூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34 கிராமங்கள் உள்ளன. தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளனது. அவை சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே அதனை அகற்றி நீர்நிலைகளை தூர்வாரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், வேலுசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கரூர் கோவை ரோடு பகுதியில் செயல்பட்ட ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் பண முதலீடு செய்தோம். மாதா மாதம் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக வந்து சீட்டு பணத்தை வசூல் செய்தனர். இந்த நிலையில் திடீரென அவர்கள் வசூலுக்கு வராமலிருந்ததால், சந்தேகத்தின்பேரில் அந்த சிட்பண்ட் நிறுவனத்துக்கு சென்று பார்த்த போது அது பூட்டப்பட்டிருந்தது. பணம் வசூலிக்கும் நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எனவே சீட்டு பணத்தை மோசடி செய்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் புதுதெருவை சேர்ந்த மாணவர் சுரேந்திரன் அளித்த மனுவில், நான் 2018-2019-ம் கல்வியாண்டில் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை படித்து முடித்தேன். இந்த நிலையில் முதுகலை படிப்பில் சேர அந்த கல்லூரியில் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்றேன். அப்போது விண்ணப்பம் பரிசீலனைக்கு வரவில்லை என கூறி என்னை நிராகரித்து விட்டனர். எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அந்த கல்லூரியில் முதுகலை படிப்பினை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கரூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மோகன்ராஜ், முருகேசன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதியுதவி திட்டம் தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பன போன்ற விவரங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் அளித்த மனுவில், க.பரமத்தி ஒன்றியம் நடத்தை ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரை டேங்கர் லாரிகளில் திருடி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அரவக்குறிச்சி, பெத்தாட்சி நகர், புதுப்பட்டி, பள்ளப்பட்டி, ஜமீன் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ரிபாய்தீன் ஹசனி தலைமையில் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஏழை, எளிய முதியோருக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும். வீடில்லாத ஏழைகளை கணக்கிட்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கண்டறியப்பட்ட 10 நபர்களுக்கு காதொலி கருவிகளையும், 2 பேருக்கு நவீன மடக்கு குச்சியையும், ஒரு நபருக்கு தையல் எந்திரத்தையும், வருவாய்த்துறை சார்பாக 2 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவுகளையும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில், பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுபிரியா, சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story