அரியமங்கலம் குப்பை கிடங்கில் நவீன உரம் தயாரிக்கும் திட்ட பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
அரியமங்கலம் குப்பை கிடங்கில் நவீன உரம் தயாரிக்கும் திட்ட பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி கீழ்பாகம் வலையப்பட்டியில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணியின் ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் சாலை அமைத்து வருகிறார். இதனால் அரசு நிதி விரயமாகி வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட சுற்றுச்சூழல் அணி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தலைமையில் வந்த நிர்வாகிகள் அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக்கூடிய ரூ.50 கோடியில் தொடங்கப்பட்ட குப்பைகளை நவீன முறையில் உரமாக தயாரிக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.மண்ணச்சநல்லூர் தாலுகா சா.அய்யம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் ஏற்றுவதற்கு 24 மணி நேரமும் 3 முனை மின்சாரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த ஊராட்சி மக்கள் மனு கொடுத்தனர். திருவெறும்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கீழகுமரேசபுரத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டுமனைக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அபிஷேகபுரம் பகுதி குழு செயலாளர் வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோரையாற்றில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், எடமலைப்பட்டியில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும், பஞ்சப்பூர், ராமச்சந்திர நகர், செட்டியபட்டி, எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி ஆகிய இடங்களில் நிழற்குடை அமைத்து தரவேண்டும். கருமண்டபத்தில் இருந்து புதூர் செல்லும் இணைப்பு சாலைக்கு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்த விவசாயிகள் மற்றும் சீர் மரபினர் பட்டியலில் உள்ள இன மக்களின் பிரதிநிதிகள் சீர் மரபினருக்கு பழங்குடியினர் இன சான்றிதழ் வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு இருப்பதால் அதன் படி சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
Related Tags :
Next Story