சூளகிரியில் நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது


சூளகிரியில் நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வி.ஐ.பி. நகரில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 40). வடமாநிலத்தை சேர்ந்த இவர், சூளகிரியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி, அடையாளம் தெரியாத கும்பல் ஆனந்தை காரில் கடத்தி சென்று ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டியது. ஆனால் தன்னிடம் ரூ.20 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறி ஆனந்த் பணத்தை கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் ஆனந்தை ஒரு மறைவான இடத்தில் இறக்கி விட்டு சென்றனர். பின்னர் இது குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வந்தனர். கடந்த 3-ந் தேதி ஓசூர் சோதனைச்சாவடியில் காரில் வந்த 5 பேர் குதித்து தப்பியோடியபோது அதில் 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கடந்த ஆண்டு சூளகிரி நகைக்கடை அதிபர் ஆனந்தை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ்(35), சூளகிரி அருகே பெரியசப்படி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ்(40) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அருள்குமார்(23), தனபால்(26) ஆகிய 2 பேரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நேற்று சூளகிரி போலீசார் கோபசந்திரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும் நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தினேஷ்(27), அவரது தம்பி விக்கி(24) என்பதும், இவர்கள் 2 பேரும் திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அடைக்கலம் கொடுத்த ஓசூர் மூக்கண்டபள்ளி எம்.எம். நகரை சேர்ந்த சங்கர்(47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சபரிநாதன், ஆனந்த், இலியாஸ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story