மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் துடிக்கிறார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் துடிக்கிறார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 15 July 2019 9:30 PM GMT (Updated: 15 July 2019 7:47 PM GMT)

ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார் என்று பாப்பிரெட்டிப்பட்டியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

பொம்மிடி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், கட்சியின் அவைத்தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன், துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் ஆர்.பாலு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி.சி.கவுதமன் வரவேற்றார்.

விழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட இணை செயலாளர் சாந்தரூபி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏகநாதன், ராணி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் சேகர் நன்றி கூறினார். பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் தேர்தல் நேரத்தில் மக்கள் மன நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கையில் ஹைட்ரோ கார்பன், 8 வழி பசுமைச்சாலை போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த அவர் துடிக்கிறார். இதற்கெல்லாம் மக்கள் ஒரு முடிவு கட்டுவார்கள்.

தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க.வை பதிவு செய்யும் வேலையில் உள்ளோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அறிவிக்கப்பட உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிடவில்லை. இந்த இடைத்தேர்தல்களில் 3 தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் 3 தொகுதிகளிலும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னர் ஒரே சின்னம் எங்களுக்கு வழங்கப்படும்போது தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story