நிலத்தை மீட்டு தர கோரி ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு


நிலத்தை மீட்டு தர கோரி ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2019 9:45 PM GMT (Updated: 15 July 2019 8:10 PM GMT)

நிலத்தை மீட்டு தர கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், 

சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி தெலுங்கானூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 31), ஓட்டல் உரிமையாளர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு கீர்த்தனா, தவசினா என்ற மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவர் 5 லிட்டர் கேனில் பெட்ரோல் கொண்டு வந்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மணிகண்டன் தனது உடலிலும் மனைவி, மகள்கள் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, காரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மணிகண்டன் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக அவருக்கு நிலத்தை எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தை அவரிடம் மணிகண்டன் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர், நிலம் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்தது தெரியவந்தது என்று கூறினர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஓட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story