வேலூர் தொகுதியில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது கலெக்டர் பார்வையிட்டார்


வேலூர் தொகுதியில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 16 July 2019 3:45 AM IST (Updated: 16 July 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்தமாதம் 5-ந் தேதி நடக்கிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 853 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,919 கட்டுப்பாட்டு கருவிகள், 2 ஆயிரத்து 99 வி.வி.பாட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இவைகள் அனைத்தும் வேலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்குவதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அழித்துவிட்டு முதல்கட்ட சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

இதற்காக பெல்நிறுவனத்தை சேர்ந்த 30 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீரமைக்கும் பணியை தொடங்கினர். இந்த பணியை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

சரிபார்ப்பு பணி முடிந்ததும் வேலூர் தொகுதிக்கு 606 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 303 கட்டுப்பாட்டு கருவிகள், 316 வி.வி.பாட் கருவிகள் அனுப்பி வைக்கப்படும். அணைக்கட்டு தொகுதிக்கு 634 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 317 கட்டுப்பாட்டு கருவிகள், 343 வி.வி.பாட் கருவிகளும், கே.வி.குப்பம் தொகுதிக்கு 610 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 302 கட்டுப்பாட்டு கருவிகள், 315 வி.வி.பாட் கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.

குடியாத்தம் தொகுதிக்கு 754 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 377 கட்டுப்பாட்டு கருவிகள், 450 வி.வி.பாட் கருவிகள், வாணியம்பாடி தொகுதிக்கு 615 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 307 கட்டுப்பாட்டு கருவிகள், 317 வி.வி.பாட் கருவிகள், ஆம்பூர் தொகுதிக்கு 634 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 313 கட்டுப்பாட்டு கருவிகள், 358 வி.வி.பாட் கருவிகள் அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Next Story